திருநெல்வேலி அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த புகார் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா வலியுறுத்தினார். 

Continues below advertisement

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் திமுக அரசு செய்யாது. பல்லை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ஏ.எஸ்.பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பவம்

Continues below advertisement

நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்வீர் சிங். இவர் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி  போன்ற காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பற்களை பிடுங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சனையை செய்ததன் காரணமாக ஏஎஸ்பி பல்வீர் சிங், சூர்யவை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து பற்களை துடிதுடிக்க பிடுங்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கவன ஈர்ப்பு தீர்மானம்

இந்நிலையில் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் திமுக அரசு செய்யாது. குற்றச் செயலலில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் சிலருடைய பற்களை பிடுக்கிய புகாரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்துவுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

மேலும், "திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொலை சம்பங்கள் வெகுவாக குறைந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 74 கொலை சம்பவங்கள் குறைந்துள்ளது. 2019ல் அதிமுக ஆட்சியில் 1,670 கொலை சம்பவங்கள் நடைபெற்றது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.