VJ COMBINES நிறுவனம் தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'படை தலைவன்'. காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம், காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களின் வாழ்வியலை விவரிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
படை தலைவன் திரைப்படம்
இயக்குநர் அன்பு இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியானது. நேற்று இரவு சினிமா பிரபலங்களுக்கான செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. அதில், கலந்துக் கொண்டு படத்தை பார்த்த சரத்குமார், ராதா ரவி, தேமுதிக தலைவர் பிரேமலதா, இயக்குநர் செல்வமணி உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டி விமர்சனம் கொடுத்துள்ளனர். பல ரிலீஸ் தேதி சொல்லப்பட்டு, ஏகப்பட்ட சிக்கல்களை கடந்து இந்த படம் கடைசியாக இன்று வெளியாகி இருக்கிறது என உணர்ச்சிவசப்பட்டு படத்தின் ஹீரோ சண்முக பாண்டியன் பேசினார். கடுமையாக உழைத்து இருக்கிறோம், எங்களுக்கு உங்களோட சப்போர்ட் தேவை என்றும் மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் சிலை முன்பு மொட்டை அடித்த நிர்வாகிகள்
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் திருக்கோவிலூர் சீனிவாசா திரையரங்கில் இன்று வெளியான படத்தினை காண வந்த தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கேப்டன் விஜயகாந்த் மார்பளவு சிமெண்ட் சிலையை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக திரையரங்கு வரை எடுத்து வந்து, திரையரங்கு வாசலில் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கி, கேப்டன் விஜயகாந்த் சிலை முன்பு பத்திற்கு மேற்பட்ட விஜயகாந்த ரசிகர்கள் மொட்டை அடித்து படத்தினை காணச் சென்றனர்.