விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் பலத்த காற்று வீசி தொடங்கியது. பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
வெளுத்து வாங்கிய மழை:
முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்த கன மழையால் நகரின் பிரதான சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கரம் மற்றும் 3 சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கியரவாண்டி, திண்டிவனம், ஜக்காம் பேட்டை, சிங்கனூர், இறையானூர், சலவாதி, பட்டணம், ஊரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பகலில் சுட்டெரித்த வெயிலால் அவதி அடைந்த நிலையில் மாலையில் பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இடி மின்னல் இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலை நேரங்களில் கனமழைபெய்து வருகிறது.
21 மாவட்டங்கள்:
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி, சேலம், கோவை, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம்:
11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
11.08.2023 மற்றும் 12.08.2023: தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.