விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த திமுக பிரதிநிதி சசிகுமார் என்பவர் திருச்சி புறவழிச்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆவின் பாலகம் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் நடத்தி வந்த ஆவின் பால் பூத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் நான் ஆவின் பால் பூத் வைத்து நடத்த போவதாகவும் கூறி

  கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த கோலியனூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால் ஆவின் பால் பூத்தை காலி செய்ய மறுத்துவிட்ட வழுதரெட்டி திமுக பிரமுகரான சசிகுமார், அதே இடத்தில் தொடர்ந்து ஆவின் பால் பூத்தை வைத்து நடத்தி வந்தார்.


தற்கொலை முயற்சி:


இதனால் ஆத்திரமடைந்த கோலியனூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், சசிகுமார் நடத்தி வந்த ஆவின் பால் பூத் பக்கத்திலேயே வேறொரு ஆவின் பால் பூத்தை வைத்து நடத்த தொடங்கினார். இதனால் திமுக நிர்வாகிகளான சசிகுமாருக்கும், சுரேஷிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த வழுதரெட்டி திமுக நிர்வாகி சசிகுமார், இன்று வாழைப்பழத்தில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு கொண்டே தன் சாவிற்கு யார் காரணம் என்று கூறி கதறி அழுதபடி திமுக நிர்வாகி சசிகுமார் வீடியோ எடுத்துள்ளார்.


அந்த வீடியோவில் தன் சாவிற்கு கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், விழுப்புரம் நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர் ஆகியோர் தான் காரணம் எனக் கூறி கண்ணீர் மல்க கதறி அழுதபடி திமுக நிர்வாகி சசிகுமார் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஷம் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சசிகுமார், தற்போது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)