திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த கல்லாமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் என்ற செல்வி. இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது மகன் தினேஷ் (வயது 25) நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மாமாவை பார்க்க சென்றார். பின்னர் அவர் இரவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வளநாடு காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று தா.பேட்டை அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை(28). இவர் காய்கறி வியாபாரம் செய்வதோடு, ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு ஜடமங்கலம் கிராமத்தில் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்து, அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செல்லதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து 1 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் இதேபோல் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜயகுமார் (42) நெல் அறுவடை எந்திரம் வைத்து வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு காவேரிபட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு குடும்பத்துடன் வேலைக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 1½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி மேற்பார்வையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் நேரில் சென்று திருட்டு சம்பவம் நடந்த வீடுகளை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஜெம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்