அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் லண்டனுக்கு சேவையை தொடங்குவதற்காக இன்று முதல் விமானம் செல்ல இருந்த நிலையில், அதிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

விபத்திற்குப் பின் இயக்கப்படவிருந்த முதல் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - ரத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த 12-ம் தேதி நிகழ்ந்த விபத்திற்குப் பின், மீண்டும் லண்டனுக்கு விமான சேவையை தொடங்கும் விதமாக, இன்று பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் AI-159, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த விமானத்தில் பயணிக்க டிக்கெட் புக் செய்திருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். இதையடுத்து, பயணிகள் அனைவருக்கும் விமானக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தொழில்நுட்பக் கோளாரால் ரத்து செய்யப்படும் 3-வது ஏர் இந்தியா விமானம் இது என்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்து

கடந்த 12-ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலைய வளாகம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரைத் தவிர மற்ற 241 பேரும் உயிரிழந்தனர். மேலும், விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 279 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு, விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்து, இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறால் அடுத்தடுத்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா என்று சொன்னாலே அலறும் அளவிற்கு மக்களின் மனநிலை ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். மக்களின் இந்த மனநிலையை மாற்ற, டாடா நிறுவனம் என்ன செய்யப் போகிறத என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.