16 எம் எல் ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மகாராஷ்டிர துணை சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடித் தூக்கியுள்ளனர். கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த அரசியல் சதுரங்கம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நர்ஹரி ஜிர்வால், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம் எல் ஏக்களை தகுதிநீக்கம் செய்து நோட்டீஸ் அளித்தார். அந்த நோட்டீஸில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? கட்சிக்கு விரோதமாக செயல்படும் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் படி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பாக ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். அந்த மனுவில், துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும், தகுதி நீக்கம் செய்யும் மனு தொடர்பாக துணை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட ஏக்நாத் ஷிண்டே தரப்பு, மகாராஷ்டிராவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிவசேனாவின் 38 எம்எல்ஏக்கள் விலக்கிக் கொண்டுள்ளதால் அந்த அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளது. அதே போல சட்டப்பேரவை கட்சித் தலைவராக சிவசேனாவைச் சேர்ந்த அஜய் சவுத்ரி நியமனமும் செல்லாது. சிவசேனாவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை என்று வாதிட்டனர்.
இதனையடுத்து, 16 பேரை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக 5 நாள்களுக்குள் பதிலளிக்க வலியுறுத்தி மகாராஷ்டிர துணை சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே, அதிருப்தி அமைச்சர்கள் 9 பேரை அமைச்சர் பொறுப்பில் இருந்து முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நீக்கியுள்ளார். அதே நேரத்தில், அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் உடனடியாக மகாராஷ்டிரா திரும்பி தங்களின் அலுவல் பணிகளை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.