திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனமானது மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் பெல் நிர்வாகத்தின் கீழும், சில ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பதாகைகளை ஏந்தியும், கருப்பு பேஜ் அணிந்தும் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பெல் நிறுவன மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பெல் நிர்வாகம் சம்பளத்தொகையை நிர்ணயித்துள்ளது. ஊதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். பெல் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெல் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பெல் மருத்துவமனை தலைமை மருத்துவர் மஞ்சுளா, பெல் மனிதவளத்துறை துணை பொது மேலாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஒரு மாத ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்றும், மீதி தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலதாமதம் படுத்தாமல் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் மிகவும் பொருளாதரத்தால் பாதிக்கபட்டுள்ளோம் ஆகையால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்