குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் விபத்துக்கு உள்ளாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதி 242 பேர் பயணித்த நிலையில், அனைவருமே பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அகமதாபாத்தில் இருந்து, லண்டன் சென்ற போயிங் ட்ரீம்லைனர் 787 - 8 ரக விமானத்தில் டேக் ஆஃப்ஃபின்போது ஏற்பட்ட பிரச்சினையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் விமானம் 825 அடி உயரத்தில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கீழே பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது மோதி விழுந்தது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் சிலரும் பலியாகி உள்ளனர்.
மிகவும் நம்பகத்தன்மை கொண்ட விமானம்
இந்த நிலையில் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் மிகவும் நம்பகத்தன்மை கொண்டது என்றே நம்பப்படுகிறது. எனினும் விமானத்தில் நிறைய வசதிகள் வேலை செய்யவில்லை என்று பயணி ஒருவர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
’’அதே விமானத்தில்தான் நான் டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை பயணித்தேன். 2 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் அகமதாபாத் வந்து சேர்ந்தேன். இந்த விமானத்தில் வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் இருந்ததைக் கவனித்தேன். இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்துக்குத் தெரிவிக்க வீடியோ ஒன்றையும் உருவாக்கினேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ’’சம்பந்தப்பட்ட விமானத்துக்குள் ஏசி சரியாக வேலை செய்யவில்லை. அதேபோல, விமானத்தில் டிவி திரை உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் முறையாக வேலை செய்யவில்லை, கேபின் குழுவை அழைக்கும் பொத்தான், விளக்கு பொத்தான்களும் வேலை செய்யவில்லை’’ என்று சம்பந்தப்பட்ட பயணி தெரிவிக்கிறார்.
இதுதொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமான விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.