மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு:


அரசை கலந்து ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக உள்விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவது தவறானது என்றும், இணைவேந்தராகிய தன்னை கேட்காமலேயே பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், விழாவில் யாரை பேச அழைப்பது என்பதும் தன்னை கேட்காமலேயே முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியிருந்தார்.  


கவுரவ விருந்தினர் என்று யாரையும் பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கும் வழக்கம் கிடையாது. பட்டமளிப்பு விழாவில் வேந்தருக்கு முன் பேச வேண்டியது இணை வேந்தர்தான் என்று கூறியதோடு பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தார் பொன்முடி. 






மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு:


இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். ஆளுநருக்கு முன் பேசிய எல் முருகன், “மத்திய அரசால் 200 கோடி பேருக்கு இலவசமாக கொரோனாவுக்கு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த திறன் கொண்ட 75 இளம் திறமையாளர்களுக்கு கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் வாய்ப்பளிக்கவேண்டும் என்று முடிவு செய்து, அவர்களை உலகம் முழுவதும் அவர்களுடைய திறமையை எடுத்துச் செல்ல ஒருதளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மத்திய அரசு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் அதில் பங்குபெற்று காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்கள்.


உக்ரைன் - ரஷ்யா இடையே போர் உச்சத்தில் இருந்தது. அங்கு இந்தியாவின் 23,000 மருத்துவ மாணவர்கள் தவித்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்து மாணவர்கள் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பிரதமர் ஆப்பரேஷன் கங்காவை தொடங்கி மாணவர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வந்தார். மேலும், தொழிற்துறையைப் பொறுத்தவரை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நம்முடைய பொருள்கள் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல முடியும். இளைஞர்களாகிய நம்மால் முடியும் எனபதற்காக தொழிற்துறையில் பல்வேறு மாற்றங்கள், பாலிசிகள், சட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றோம்” என்று பேசினார்.


ஆளுநர் பேச்சு:


பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  “காமராஜர் சிறந்த தேசியவாதி; எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவர்; கிராமப் பகுதியில் இருந்து வந்து பாரத ரத்னா பெறும் அளவுக்கு உயர்ந்தவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தைப் பார்த்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் காமராஜர்” என்றார்.


மேலும், “சாதி, மத ரீதியிலாக பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் கையாண்டனர். வட அமெரிக்காவில் படுகொலைகள் மூலமாக காலனி ஆதிக்கம் நிறுவப்பட்டது” என்று பேசினார்.






 “ஆண்களை விட பெண்கள் தான் தற்போது அதிக அளவில் பட்டம் பெறுகின்றனர். மாணவர்கள் பெரிய அளவில் கனவு காணவேண்டும். சிறிதாக கனவு கண்டால் சிறிய அளவு உயரலாம். பெரிய அளவில் கனவு கண்டால் பெரிதாக உயரலாம். வலி இல்லாமல் எந்த நன்மையும் கிடைக்காது. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், பிரச்சினைகள் வந்தாலும் லட்சியத்தை நோக்கி ஓடுங்கள். ஏனெனில் சிங்கம், புலிகள் போன்றவை வேட்டையாட காத்திருக்கின்றன” என்று ஆளுநர் ரவி பேசினார். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் என்று தமிழில் கூறினார்.