உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஐந்து சிறுமிகள், ஐந்து சிறுவர்கள் அடங்கிய என்சிசி குழுவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றிய NCC மாணவர்கள்:
கடந்த மே 18ஆம் தேதி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய தேசிய மாணவர் படையை (NCC) சேர்ந்த ஐந்து சிறுமிகள் மற்றும் ஐந்து சிறுவர்கள் அடங்கிய குழுவை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (12.06.2025) பாராட்டினார்.
கர்னல் அமித் பிஷ்ட் தலைமையிலான குழுவின் துணிச்சல், மன உறுதி மற்றும் தேசபக்தியைப் போற்றும் வகையிலும், எந்தவொரு காயமும் இல்லாமல் மிகக் கடுமையான சூழ்நிலையிலும் இந்த சாதனையை எட்டியதற்காகவும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவர்களுக்கு மத்திய அமைச்சர் வழங்கினார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை:
டெல்லியின் சவுத் பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தேசிய மாணவர் படையினர் தங்கள் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கடுமையான பயிற்சி, நுணுக்கமான திட்டமிடல் மற்றும் சந்தித்த சவால்களை அவர்கள் விவரித்தனர்.
இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக தேசிய மாணவர் படையினர் இருப்பதாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்தப் பயணத்தின் மூலம், உலகின் மிக உயர்ந்த சிகரம் கூட நாட்டின் இளைஞர்களுக்கு எல்லையாக இருக்காது என்ற செய்தியை துணிச்சலான தேசிய மாணவர் படையினர் வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறினார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது காட்டிய அதே தைரியத்துடனும் உறுதியுடனும் தேசிய மாணவர் படையினர் எதிர்கால சவால்களை எதிர்கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய மாணவர் படையினரிடையே தேசிய உணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், வலிமையாக்குவதன் மூலமும், சமூகத் திறன்களை வளர்ப்பதன் மூலமும் அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் தேசிய மாணவர் படை மேற்கொண்ட முயற்சிகளை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். இந்த முயற்சியில் அவர்களுக்கு ஆதரவளித்த தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.