சினிமா பிரம்மாண்டம் இயக்குநர் சங்கர் என்றால், அரசியலின் பிரம்மாண்டமாக செந்தில் பாலாஜியை கூறலாம். இவர் நடத்தும் நிகழ்ச்சிகள் எல்லாம் அப்படி பிரம்மாண்டமாகவே இருக்கும். சேரும் கட்சியில் வகிக்கும் பதவிகள் எதுவானாலும் சாதாரண உள்ளரங்கு கூட்டம் தொடங்கி பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் வரை அனைத்திலும் பிரம்மாண்டத்தை காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடியவர் மின்சாரத்துறை அமைச்ச்சர் செந்தில் பாலாஜி. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்ட வாரியாக கிராம சபை கூட்டங்களை திமுக நடத்தியது. அதன்படி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் சிறிய மேடை அமைக்கப்பட்டு மேடையின் கீழே பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு, மேடையில் சம்மணம் இட்டபடி அமர்ந்தும் மக்களிடன் அருகில் நடந்தும் சென்று பேசுவதும் ஸ்டாலினின் வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கரூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மட்டும் மக்களை நோக்கி ஸ்டாலின் நடந்து செல்லும் இடம் முழுக்க ஒரு அடி உயர மேடையை அமைத்து டிஃபரண்ட் காட்டி இருந்தார் செந்தில் பாலாஜி. இந்த டிபரண்ட் மேடை புதியதாக திமுகவிற்கு வந்த செந்தில் பாலாஜியை மின்சாரத்துறை அமைச்சர் வரை உயர்த்தி பலருக்கும் ஷாக் அடிக்க வைத்திருந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு 10,000 ரூபாய் பொற்கிழியை கொடுத்து மேலும் அதிர வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி, கொங்கு அட்லஸ் கலையரங்கத்தில் மாலை 5 மணி முதல் திமுக முப்பெரும் விழா சமூக இடைவெளியுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி சரியாக ஐந்து மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி அரங்கம் முழுவதும் 250 திமுக மூத்த கழக முன்னோடிகள் சமூக இடைவெளிவிட்டு முக கவசம் அணிந்து அமர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நடந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியை பெரிய திரை வாயிலாக பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை விட நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. அதேபோல், திருக்காம்புலியூர் ரவுண்டானா முதல் சுமார் 2 கிலோ மீட்டர் மேல் உள்ள அட்லஸ் கலையரங்கம் வரை சாலை எங்கிலும் கருப்பு சிவப்பு கொடி பட்டொளி வீசிப் பறந்தது.
விழாவில் முன்வரிசையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் மின்சார துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி அமர, எதிர்த்து அரசியல் செய்ததன் மூலம் அரசியல் ஏணியில் ஏற்றம் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியும் அருகே அமர்ந்திருந்தார். மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரிசையில் அமைந்திருந்தன. அவருக்குப்பின் வரிசைகளில் திமுக மூத்த முன்னோடிகள் அமர்ந்திருந்தனர். மூத்த முன்னோடிகள் 250 நபர்களைத் தவிர மற்ற திமுக நிர்வாகிகள் அரங்கம் வெளியே காத்திருந்தனர்.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பல்வேறு தலைவர்கள் சென்னையில் பேசியதை அப்படியே திரையில் ஒளிபரப்பு செய்தனர். இறுதியாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பேசுகையில் கரூர் மாவட்ட மூத்த நிர்வாகிகள் தங்க முகம் மகிழ்ச்சியுடன் அவர்கள் பேச்சை உன்னிப்பாக கேட்டு கைத்தட்டி மகிழ்ந்தனர். பின்னர் கரூர் மாவட்ட கழக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத் துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தனது அருகே இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான கே.சி. பழனிச்சாமியிடம் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கக்கூடிய ரூபாய் பத்தாயிரத்துக்கு உண்டான காசோலையை (பொற்கிழி) வழங்க இவர் உடன் இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகிகளிடம் பொற்கிழிகளை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் 250 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் பையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படமும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படமும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படமும் இடம்பெற்றிருந்தது. அந்த பையின் உள்ளே திமுக வேட்டியும், பத்தாயிரத்திற்கு காசோலையும் உள்ளே இருந்தது.