கர்நாடகாவில் புகையிலை பொருட்களை வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறினால் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் ரூ.200 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள்:
புகைபிடிப்பதால் புற்றுநோய், இதய பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பார்வையிழப்பை ஏற்படுத்துவதில் புகையிலை முக்கியப்பங்கு வகிக்கிறது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
புகைபிடித்தல் கண்ணின் மையப்பார்வையை (macula) கடுமையாக பாதிக்கிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) ஏற்படுவதற்கான ஆபத்து புகைப்பிடிக்காதவர்களை விட ஐந்து முதல் ஆறு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்:
உலகில் வயது வந்தவர்களில் நான்கில் ஒருவர் புகையிலை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவதில் ஆண்கள், பெண்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரையில், மூன்றில் ஒரு ஆண், புகையிலை பயன்படுத்துபவராக இருக்கிறார். ஆனால், பெண்களை பொறுத்தவரையில் அது மிக குறைவு.
பத்தில் ஒன்றுக்கும் குறைவான பெண்ணே புகையிலை பயன்படுத்தி வருதவாக கூறப்படுகிறது. இப்படி, உலக சுகாதாரத்தில் புகையிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடகாவில் புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த மே 23ஆம் தேதி, மத்திய புகையிலை கட்டுப்பாடு சட்டத்தில் கர்நாடக அரசு திருத்தம் மேற்கொண்டது. அதற்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டப்பட்டது.
அதன்படி, 21 வயதுக்குட்பட்ட எவருக்கும் சிகரெட் அல்லது பிற புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறல்களுக்கான அபராதம் இப்போது ரூ.1,000 ஆக உள்ளது. புதிய சட்டத்தில் 4ஏ பிரிவின் கீழ் ஹூக்கா பார்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு, ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்கும் மசோதா மாநிலத்தின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க: Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?