இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை நேரடியாகவே நடைபெற்றதாகவும், வேறு எந்த நாட்டின் தலையீடும் இல்லை என இந்தியா கூறிவரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி அதற்கு எப்போது பதில் அளிப்பார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்‘ தாக்குதல்

காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதற்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான், எல்லைப் பகுதியில், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தாக்குதல் நிறுத்தப்பட்டது.

எனினும், இந்த தாக்குதல் நிறுத்தம் தற்காலிகமானதுதான் என்றும், முப்படைகளும் எந்த நேரமும் தயாராகவே இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இனி இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு தீவிரவாத நடவடிக்கையும் போராகவே கருதப்படும் என்றும், இந்தியா உடனடியாக பதிலடி கொடுக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மோடி.

போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் என கூறிவரும் ட்ரம்ப்

இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவருகிறார். இரு நாடுகளுக்கும் இடையே தான் மத்தியஸ்தம் செய்ததாகவும், இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை தடுத்து விட்டதாகவும் ட்ரம்ப் பல்வேறு இடங்களில் பேசியபோது கூறினார். தற்போதும் அவ்வாறே கூறி வருகிறார்.

ஆனால், ட்ரம்ப்பின் கூற்றை மறுத்த இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகத்தான் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், எந்த ஒரு நாட்டின் தலையீடும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி எப்போது பதில் அளிக்கப் போகிறார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

இது தொடர்பாக, காகிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டொனால்ட் ட்ரம்ப்பின் வீடியோ ஒன்றை டேக் செய்து, பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில், பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்தேன் என ட்ரம்ப் பேசியுள்ளார்.

இதை சுட்டிக்காட்டி, 21 நட்களில் 11-வது முறையாக, பிரதமர் மோடியின் சிறந்த நண்பரும், அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் ஆனது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். சமரசத்திற்கு காரணம் தானே என ட்ரம்ப் கூறும் நிலையில், பிரதமர் எப்போது பேசுவார்.? என கேள்வி எழுப்பியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

ட்ரம்ப் தொடர்ந்து இவ்வாறு கூறிவரும் நிலையில், அதற்கு பிரதமர் பதில் அளிக்காததால், இவ்விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.