இந்திய அணியின் டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது இந்த முடிவு குறித்து அவர் விரிவான விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி பொறுப்பில் கவனம் செலுத்துவதற்காக டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் நடைபெறவிருக்கும் டி-20 உலகக்கோப்பையில் கேட்படன் பொறுப்பை ஏற்பதாகவும், அதன் பின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குபின் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் கேப்டன் கோலியின் ரெக்கார்டுகள் பற்றிய ஒரு அலசல் இதோ!


இதுவரை சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 3149 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனான கோலி, கேப்டனாகவும் டி-20 கிரிக்கெட்டில் சிறப்பாகவே விளையாடியுள்ளார். 


டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக இதுவரை 45 போட்டிகளில் வழிநடத்திச் சென்றுள்ள கோலி, 27 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளார். 14 போட்டிகளில் தோல்வியையும், 4 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் முடிந்துள்ளது. டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக விராட் கோலியின் வெற்றி சதவிகிதம் - 65.11 %






இந்திய அணியின் டி-20 கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற ரெக்கார்டையும் கோலி தன்வசம் வைத்துள்ளார். 1421 ரன்கள் எடுத்திருக்கும் அவர், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


டி-20 கிரிக்கெட்டில், தோனி தலைமையில் 42 போட்டிகளிளும், கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி 27 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. 


டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்தபோது அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் கோலி. வெறும் 30 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார் விராட். 


ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்ரிக்க நாடுகளில் டி-20 தொடர்களை வென்றுள்ள ஒரே இந்திய கேப்டன் விராட் கோலி. 


வெற்றிகளும், தோல்விகளும் கலந்து இருந்தாலும், கோப்பைகளே பதில் சொல்ல வேண்டியுள்ளது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி இன்னும் ஐசிசி கோப்பையை பெறவில்லை என்பதும், ஐபிஎல் கோப்பையும் கைக்கு எட்டாததும் இந்திய ரசிகர்களின் நீங்காத எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த ஏக்கம், இந்த டி-20 உலகக்கோப்பையில் நிறைவேறும் என நம்புவோம். வாழ்த்துகள் கோலி!