இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நடந்தபோது, 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், இந்தியா தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான் உறுதியாக தெரிவித்ததால், சந்தேகங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில், இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியே, இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் பேட்டியளித்தபோது உண்மையை கூறிய முப்படைகளின் தலைமைத் தளபதி
சிங்கப்பூரில் இன்று ஷாங்க்ரி-லா மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி(Chief of Defence Staff) ஜெனரல் அனில் சவுகான் பங்கேற்றார். பின்னர் அங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தான் உடனான ராணுவ மோதலின்போது, இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுவது குறித்த தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, எத்தனை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது முக்கியமல்ல, அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற காரணம்தான் முக்கியம். அவை ஏன் வீழ்த்தப்பட்டன, என்ன தவறுகள் செய்தோம் என்பதுதான் முக்கியம் என அவர் கூறினார்.
மேலும், “நாங்கள் செய்த தந்திரோபாய தவறை புரிந்து கொண்டோம், அதை நாங்கள் சரி செய்தோம், பின்னர் 2 நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து போர் விமானங்களும் மீண்டும் சென்று, நீண்ட தூர இலக்குகளை தாக்கின“ என்று அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது உண்மையா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெனரல் அனில் சவுகான், 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவது மற்றுலும் உண்மைக்கு புறம்பானது என்று கூறியதுடன், எண்ணிக்கையை விட, அவை ஏன் வீழ்ந்தன என்பதை ஆராய வேண்டியதுதான் முக்கியம் என மீண்டும் தெரிவித்தார்.
இவரது இந்த பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் இந்த பேட்டியை குறிப்பிட்டு, பல்வேறு கேள்விகைளை எழுப்பியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே எழுப்பிய கேள்விகள் என்ன.?
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிங்கப்பூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி அளித்த பேட்டியை பார்க்கும்போது, சில முக்கியமான சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த கேள்விகளை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டினால் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார். மோடி அரசு நாட்டை தவறாக நடத்தியுள்ளது என்றும், போர் மூடுபனி தற்போது விலகுகிறது என்றும் கூறியுள்ளார்.
நமது விமானப்படை வீரர்கள் எதிரிகளுடன் போரிட தங்களது உயிரையே பணயம் வைத்துள்ளனர். நமது தரப்பிலும் சில இழப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் விமானிகள் பத்திரமாக உள்ளனர் என கூறியுள்ள அவர், அவர்களின் உறுதியான தைரியம் மற்றும் வீரத்திற்கு வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஒரு விரிவான மூலோபாய மறு ஆய்வே இந்த நேரத்தின் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கார்கில் மறுஆய்வுக் குழுவைப் போன்ற சுதந்திரமான நிபுணர் குழுவினால், நமது பாதுகாப்பு தயார்நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோருவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததாக மீண்டும் தெரிவித்துள்ளார், இது சிம்லா ஒப்பந்தத்திற்கு நேர் எதிரானது என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ட்ரம்ப் மீண்டும் மீண்டும் தெரிவிக்கும் கூற்று குறித்தும், அமெரிக்க வர்த்தக செயலாளர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலம் குறித்தும் விளக்காமல், தேர்தல் வேலைகளிலும், இந்திய ராணுவத்தின் வீரத்தை தன்னுடையதாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் இணைப்பில் உள்ளனவா என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிலை என்ன எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.