நெல்லை அரசு விரைவு  போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து ஒன்று நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது பேருந்தை கோவில்பட்டியை சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். குறிப்பாக இந்த பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் இடைவெளி பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பயணிகளும் பயணித்துள்ளனர். மேலும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி என பல ஊர்களில் பயணிகள் இறங்கியும் உள்ளனர். இந்த நிலையில் இந்த விரைவுப் பேருந்து இன்று காலை 11.20 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்டு விட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு வந்துள்ளது.


இங்கு பணிமனை ஊழியர்கள் பேருந்தை  சுத்தம் செய்த போது பேருந்தில் 9 எண் கொண்ட படுக்கைக்கு கீழ் ஒரு கை துப்பாக்கி மற்றும் அரிவாள் ஒன்றும் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தங்கள் அதிகாரியிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அத்தகவலின் படி பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்தினரிடமும் பயணிகள் குறித்து கேட்டறிந்தனர். தடய அறிவியல் வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் துப்பாக்கி, அரிவாள் மற்றும் அங்கு பதிந்திருந்த கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். இதனை அடுத்து பாளையங்கோட்டை போலீசார் துப்பாக்கி மற்றும் அரிவாளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


குறிப்பாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கொண்டு வந்தார்களா? அல்லது பேருந்து புறப்பட்ட இடத்தில் யாரும் வைத்தார்களா? இதில் சதித் திட்டம் ஏதும் உள்ளதா என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.