சென்னையில், மிகவும் பழமையான செனாய் நகர் திரு.வி.க பூங்கா, மெட்ரோ நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு பசுமை சுற்றுச்சூழலை ஏற்படுத்தி, அதை பராமரித்தும் வருகிறது சிஎம்ஆர்எல். இந்நிலையில், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பது குறித்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட வீடியோ
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் செனாய் நகர் திரு.வி.க பூங்காவின் வீடியோ ஒன்றை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
நன்கு வடிவமைக்கப்பட்ட நகர்ப்புற பசுமையான இடம், சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பது மற்றும் இயற்கை சூழலை மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்டு, அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை விளக்கும் விதமாக அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
செனாய் நகர் புதிய பூங்காவின் சிறப்புகள்
சென்னை செனாய் நகர் பூங்கா 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 2011-ம் ஆண்டு, மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்த பூங்கா மூடப்பட்டது. பின்னர், மெட்ரோ பணிகள் முடிந்த நிலையில், சர்வதேச தரத்தில் பூங்கா புதுப்பிக்கப்பட்டது.
சுரங்கப் பாதையில் உள்ள செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில், அரச மரம், மா மரம், புங்கை மரம், வேம்பு மரம், பூவரசம், நெல்லி, தேக்கு உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஜப்பான் தொழில்நுட்ப முறையில், 5000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, மியாவாக்கி காடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரு.வி.க பூங்காவில் உள்ள கழிப்பறைகள், குப்பைத் தொட்டிகள் துர்நாற்றமின்றி தூய்மையாக பராமரிக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதோடு, இங்கு வண்ண வண்ண பூச்செடிகளுடன் புல்தரைகள் பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளன. அது போக, கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து, இறகுப்பந்து மைதானங்கள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், இசை நீரூற்று, கிரிக்கெட் பயிற்சி செய்ய இடம், ஸ்கேட்டிங், தியான, யோகா மையங்கள், விளையாட்டுத் திடல், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி என அனைத்துமே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு, சிறப்பாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுகின்றன.