Jyotiraditya Scindia's Mother:  மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயாரும், குவாலியர் அரச குடும்பத்தின் 'ராஜமாதாவாகிய' மகாராணி மாதவி ராஜே சிந்தியா காலமானார்.


ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்:


பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயாரும், குவாலியர் அரச குடும்பத்தின் ராஜமாதாவுமான  மாதவி ராஜே, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று ( மே 15 )காலமானார். 


இவர், உடல் நலக் குறைபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக மாதவி ராஜே சிந்தியாவின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காலமானார். இந்நிலையில், இன்று காலை 9.28 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.  






மக்கள் இறுதி அஞ்சலி:


இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தரப்பில் கூறியதாவது, ராஜமாதா மாதவி ராஜே சிந்தியா இப்போது இல்லை, என்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.  இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்களுக்கு அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள இல்லத்தில், அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், பின்னர் அவர்களது சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியருக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




யார் இவர்? 


மாதவி ராஜே நேபாளத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 1966 ஆம் ஆண்டு மாதவ்ராவ் சிந்தியாவை திருமணம் செய்தார்.  மாதவி ராஜே சிந்தியாவின் தாத்தா ஜுத்தா ஷும்ஷர் ஜங் பகதூர் ராணா நேபாளத்தின் பிரதமராக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. மாதவி ராஜே சிந்தியா இளவரசி கிரண் ராஜ்ய லட்சுமி தேவி என்றும் அழைக்கப்படுகிறார்.


இவரது மறைவுக்கு மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான சிவராஜ் சிங் சவுகான்  உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்.