விழுப்புரம் மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல்

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் ஒரு பொதுவான பிரச்சனை. தென்னையில் காணப்படும் வெள்ளை ஈக்கள் (Rucous spiral whitefly) தென்னை மரத்தின் சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும், அவை தேன்போன்ற திரவத்தை வெளியேற்றி, ஓலைகளின் மீது கரும் பூஞ்சாணம் படரவும் காரணமாகின்றன. இவற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ. இந்த வெள்ளை ஈக்கள் உறிஞ்சும் பூச்சி இனத்தை சேர்ந்தது. முதிர்ந்த ஈக்கள் வெள்ளை நிறத்திலும் அதன் முட்டைகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். ஊசி போன்ற வாய் அமைப்பு கொண்டதால், தாவரத்தின் இலைகளில் உள்ள சாறுகளை எளிதாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது

கோடை காலத்தில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். 2016-ம் ஆண்டு  கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் இதன் தாக்கம் அதிகம் இருப்பது கண்டறிப்பட்டது. ஆனால் தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள தென்னை வயலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி, மகசூலை குறைக்க செய்கின்றது.

நோய் தாக்கத்தின் அறிகுறி:

தென்னை கீற்றுகளின் அடிப்புறத்தில் சுருள் வடிவில் வெள்ளை ஈக்கள் காணப்படும். இவை ஓலையின் அடிப்புறத்தில் அமர்ந்து சாற்றினை உறிஞ்சி, தேன் போன்ற எச்சத்தை வெளியிடுவதால் எறும்புகளின் நடமாட்டம் தென்படும். அதன் மூலம் இவற்றின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் ஓலையின் மேற்புறத்தில் கருமை நிற பூஞ்சான் படலம் உருவாகி ஒளிச்சேர்க்கை திறன் பாதிக்கப்பட்டு தென்னை மரம் மடிந்து போகும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை ஈக்களை அழிக்க தென்னங்கீற்றுகளின் அடிபரப்பை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் ஐந்து மில்லி மற்றும் ஒட்டும் திரவம் ஒரு மில்லி என்ற அளவில் கலந்து மரங்களின் அடிக்கிற்றுகள் நன்கு நனையும்படி தெளிக்கவும். இதுபோன்று 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதனால் வெள்ளை பூச்சிகளின் தாக்கத்தை 60 முதல் 70% கட்டுப்படுத்தலாம். மஞ்சள் நிற பாலத்தீன் தாள்களில்(நீளம் 5 அடி × அகலம் 1.5 அடி) இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு 10 வீதம் தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டும் அல்லது தண்டு பகுதியில் சுற்றியும் கட்ட வேண்டும்.

இது ஈக்களை கவர்ந்தும் அழிக்கும். மேலும் அபெர்டோகிரைசா இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 வீதம் கீற்றுகளில் கட்டவும், என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் 10 மரத்திற்கு ஒரு இலைத்துண்டு என்ற எண்ணிகையில் கீற்றுகளில் கட்டவும்.  கரும்பூசணத்தை நீக்க 25 கிராம் மைதா மாவுப்பசையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

மேலும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி முறையாக பராமரித்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என தோட்டக்கலை துறை அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்தார்.