நாகையில் காவல் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரி பெண்கள் முற்றுகையிட்டனர். இரண்டு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மதுபான கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக  தலைவர் உறுதி அளித்தார்.


 

நாகை நகர காவல் நிலையத்தின் மிக அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் குடிமகன்கள் சாலையோரத்தில் நின்று மது அருந்துவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால், காவல் நிலையம், கோவில், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன்னல்களையும் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தினர். போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், தகவலறிந்து அங்கு வந்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது இரண்டு மாதத்தில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இல்லையென்றால் நானே கடையை மூடுவேன் எனவும் பொதுமக்களிடம் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.