திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மையாரின் நினைவகத்தில் எதிரில் அமைந்துள்ள பள்ளியாகும். இந்த பள்ளிக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகள் அளித்த நிதி மூலம் சுற்றுச்சுவர் மற்றும் புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் அரசு பள்ளியில் இருக்கும் சலுகைகள் மற்றும் அரசு பள்ளியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் இந்த பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பங்குபெற்ற பேரணி நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். சமுதாயத்தில் சமதர்மம் நிலை பெற கல்வி ஒன்றே வழியாகும். குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம் நூறு சதவீதம் இலக்கை அடைவோம். ஐந்து வயதில் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்போம் கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பள்ளி மாணவ மாணவிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை விழுக்காட்டை அதிகரிக்கும் வகையிலும், கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வியால் ஏற்படும் நன்மைகளையும், குழந்தை தொழிலாளர் முறையினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும், பள்ளி கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த பேரணி அரசுப்பள்ளிகளில் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி அனைத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று காட்டூர் கடைத்தெரு வரை நடைபெற்றது.
இதில் வீடு வீடாக மாணவ, மாணவிகள் துண்டு பிரசுரங்களை கொடுத்து அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் மற்றும் உயர் கல்விகளில் கிடைக்கும் இட ஒதுக்கீடு ஆகியவற்றை பற்றி எடுத்துக் கூறி அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்படுத்தினர். முன்னதாக இந்த பேரணியை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் காட்டூர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்