ஆனந்தம் திரைப்படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளியான சண்டைக்கோழி இன்றளவும் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். ஆனால் அடுத்தடுத்த படங்கள் லிங்குசாமிக்கு கைகொடுக்கவில்லை. சூர்யா நடிப்பில் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அடிவாங்கியது. அதேபோல் சண்டைக்கோழி 2 திரைப்படமும் லிங்குசாமிக்கு சறுக்கியது. அதன்பின்னர் லிங்குசாமி சிறிது கேப் விட்ட நிலையில் வெற்றிப்படம் ஒன்றை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். 




இந்நிலையில்தான் தி வாரியர் படத்தை அவர் இயக்கினார். தெலுங்கின் ராம் பொத்தனேனி, கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் வரும் 15ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஷங்கர்,மணிரத்னம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


விழா மேடையில் பேசிய லிங்குசாமி தழுதழுத்து கண் கலங்கினார். பேச முடியாமல் கண் கலங்கியவாறே நின்ற லிங்குசாமியை நடிகர் ராம் பொத்தனேனி கட்டியணைத்து தேற்றினார். சிறிது தண்ணீர் கொடுத்து லிங்குசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார். 






மேடையில்பேசிய லிங்குசாமி,'' பஞ்சாப் ஷூட்டிங்கில் இருந்து ஷங்கர் வந்துள்ளார். எனக்காக பார்த்திபன், மணிரத்னம் ஆகியோர் வந்துள்ளனர். நான் மனிதர்களை அதிகம் சம்பாதித்துள்ளேன். நான் எதை இழந்தாலும் மனிதர்களை இழக்கமாட்டேன்.  ஒரு காலக்கட்டத்தில் நான் வாய்ப்புத்தேடி காத்திருந்த மனிதர்கள் இன்று எனக்காக வந்திருக்கின்றனர் என்பதே மகிழ்ச்சி. எனக்கு கார்,வீடு, அலுவலகம் இல்லாமல் போனாலும்  மனிதர்களை எப்போதும் சம்பாதித்து வைத்திருப்பேன். நான் ஊரில் இருந்து எதுவுமே இல்லாமல் வந்தவன். மனிதர்களை சம்பாதிப்பதே என் நோக்கமாக இருந்தது. இனியும் அப்படித்தான் செயல்படுவேன் என்றார்.


தெலுங்கு,தமிழ் திரைப்படமாக உருவாகியுள்ள தி வாரியர் ஆந்திராவில் 450-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.  அதேபோல் தமிழகத்தில் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண