சமீப காலங்களில் குடும்ப வன்முறை என்பது பெருமளவு அதிகரித்து வருகிறது.  பொதுவாக வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்த்து பொருள் ஈட்டும் கணவன், வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் மனைவி ஆகியோரிடையே ஏற்படும் வன்முறை சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. கணவன் தான் சம்பாதித்து கொடுக்கும் பணத்தில் தனக்கு மட்டும் உரிமை இருக்கிறது என்று கருதுவதாலும், மனைவி வீட்டு தேவைக்காக செய்யும் அவசிய செலவுகளுக்கு கூட கணக்கு கேட்டு தொந்தரவு செய்வதாலும், பல்வேறு வன்முறை சம்பவங்கள் குடும்பத்திற்குள் ஏற்படுகின்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 38). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மனோஜினி வயது 27, இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆன நிலையில் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று பார்த்தசாரதி வேலைக்கு சென்று வந்து வீட்டில் தனது சட்டையை கழற்றி வைத்துவிட்டு வேறு சட்டையை அணிந்து கொண்டு வெளியில் சென்றுள்ளார்.




இந்த நிலையில், அவரது மனைவி மனோஜினி கணவரின் சட்டை பையில் 200 ரூபாய் பணம் எடுத்து மளிகை பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் வாங்கி உள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பார்த்தசாரதி சட்டைப்பையில் வைத்திருந்த 200 ரூபாயை காணவில்லை என தேடி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சட்டையில் இருந்த பணம் எங்கே என மனைவியிடம் கேட்டதற்கு மளிகை பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் வாங்கிவிட்டேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி என்னை கேட்காமல் எப்படி பணத்தை எடுத்தாய் என சண்டை போட்டுள்ளார். மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் கேனில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து மனைவி மனோஜினி மேல் ஊற்றியதாக கூறப்படுகிறது. 




மனைவி மனோஜினியும் ஆத்திரத்தில் அருகில் இருந்த அடுப்பில் எறிந்து கொண்டிருந்த விறகு கட்டையை எடுத்து தனக்கு தானே தீ வைத்து கொண்டார். மனோஜனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மனோஜினி 85 சதவீதம் தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மனோஜினியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பார்த்தசாரதியை பேரளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் குடும்ப வன்முறை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்பட வேண்டும். பெண்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் போது அதற்கான சட்ட உதவியை எங்கிருந்து நாடுவது, யாரை அணுகுவது உள்ளிட்ட பல்வேறு குடும்ப வன்முறை தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துவதன் மூலம் இது போன்ற குடும்ப வன்முறைகளை தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண