கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்ததால் மயிலாடுதுறை பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கியுள்ளது, இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 -ஆம் தேதி மாறும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது நேற்று முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வந்தது. நேற்று மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை விடிய விடிய பெய்து தற்போதும் தொடர்கிறது. மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போன்று கனமழையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைமை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடாமல் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதாலும், சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு உகந்தது என்பதாலும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Rain Alert: கனமழை எச்சரிக்கை - 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம் - வருவாய்த்துறை தீவிரம்
பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் வருகை இல்லாமலும், தீபாவளி விடுமுறை முடிந்த மறுநாள் என்ற போதிலும் பேருந்து நிலையங்களில் பேருந்துகள் பயணிகள் இல்லாமல் செல்கின்றன. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 68.6 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ள நிலையிலும் சீரான இடைவெளியில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை காணமுடியவில்லை. துலா உற்சவத்துக்காக திறக்கப்பட்ட நீர் காவிரி ஆற்றில் மட்டும் பாய்கிறது. பிற பகுதிகளில் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மழை நீர் விரைவாக வடிந்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து மழை நின்ற பிறகு வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுக்க உள்ளதாக வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிப்புகள் குறித்த முக்கிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 411.8 மில்லிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மணல்மேடு 58 மில்லிமீட்டர், கொள்ளிடத்தில் 63.8 மில்லிமீட்டர், சீர்காழி 73.2 மில்லிமீட்டர், பொறையாரில் 77.1 மில்லிமீட்டர் மழையும், அதிகப்பட்சமாக மயிலாடுதுறை 84.1 மில்லிமீட்டர் மழையும், குறைந்த பட்சமாக செம்பனார்கோயில் 55.6 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Children's Day 2023: ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”.. தேசிய குழந்தைகள் தினம் இன்று..!