பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா, முந்தைய சீசன்களை பற்றி வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். 


விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. 


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றனர். இதில் விஜய் வர்மா, அனன்யா ராவ், பவா செல்லதுரை, வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மாயா, பூர்ணிமா,ஜோவிகா, ஐஷூ, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா,நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய்,கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் உள்ளே உள்ளனர். 






இதனிடையே இந்த வார கேப்டனாக தினேஷ் காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழத் தொடங்கியுள்ளது. காரணம் கடந்த 2 வாரமும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் சரிக்கு சமமான சண்டைக்கு சென்றார் தினேஷ். நியாயம், தர்மம் என அவரின் கருத்துகளுக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் போட்டிகளிலும் தினேஷ் சிறப்பாக செயல்படுகிறார். 


இந்த நிலையில் தான் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா உள்ளே இருந்துக் கொண்டு பிக்பாஸ் முந்தைய சீசன்களை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில் பேசும் பூர்ணிமா, “எனக்கு தெரிஞ்சி கொஞ்சம் இந்த சீசனில் எல்லோரும் ஒழுங்காக விளையாடுகிறார்கள். ஏனென்றால் முந்தைய சீசன் எல்லாம் இப்படி இருக்காது. நல்ல ஸ்ட்ராங்கான நபர்களை எல்லாம் வெளியே அனுப்பிடுவாங்க. சம்பந்தமே இல்லாதவர்கள் தான் இறுதிச்சுற்றில் இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே பிக்பாஸ் நீதிமன்ற டாஸ்க்கில் தன்னிடம் ஒருதலைப்பட்சமாக நடந்துக் கொண்டதாக பிக்பாஸ் மீது குற்றம் சாட்டினார் பூர்ணிமா. இப்போது முந்தைய சீசன்கள் பற்றியும், அதில் சம்பந்தமே இல்லாதவர்கள் இறுதி சுற்றுக்கு வந்ததாகவும் தெரிவித்தது முந்தைய போட்டியாளர்களின் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.