தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே. பிரபாகர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், எந்த தேவையையும்  சமாளிக்க போதுமான  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.  பல்வேறு மாவட்டங்களில் இன்று கன் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், வருவாய்த்துறை இந்த கடிதத்தை எழுதியுள்ளது.


27 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை:


கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கடிதம் எழுதியுள்ள தமிழக அரசின் தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகங்களைத் தயார்படுத்த வேண்டும், எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


கனமழை எச்சரிக்கை:


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று,  தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான-கனமழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.