அனைத்து மாநிலங்களுக்கும் பொது நாடாளுமன்றம்... தமிழ்த் தேசிய பேரியக்கம் கூட்டத்தில் தீர்மானம்
ஜனநாயக கூட்டாட்சி முறையை இந்தியாவில் செயல்படுத்த, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இதற்கு தமிழ்நாடு மக்களும், அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு மாற்றாக அனைத்து மாநிலங்களுக்கும் பொது நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களவை தேவையில்லை என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, இயக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு மாற்றாக, எல்லா மாநிலங்களுக்கும் பொது நாடாளுமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும், மாநிலங்களவை தேவையில்லை. உத்திரபிரதேசத்துக்கும், தமிழகத்துக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்தும் தரப்பட வேண்டும். ராணுவம், வெளியுறவுத்துறை, பண அச்சடிப்பு போன்ற முக்கிய துறைகள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மற்ற அனைத்து அதிகாரங்களும் அந்தந்த மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: மார்ச் 31 -ம் தேதி கடைசி நாள்... எதற்கு தெரியுமா..? முழு விபரம் உள்ளே இருக்கு...!
இது போன்ற ஜனநாயக கூட்டாட்சி முறையை இந்தியாவில் செயல்படுத்த, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இதற்கு தமிழ்நாடு மக்களும், அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக தஞ்சாவூரில் மே மாதம் கூட்டாட்சி கோரிக்கை சிறப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே போதுமானது. மும்மொழி கொள்கை வேண்டாம், இந்த நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து பல கோடி ரூபாயை வரியாக அள்ளிச் செல்லும் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்குரிய நிதி பங்கை தர கல்விக் கொள்கையை நிபந்தனையாக்குவது அப்பட்டமான அடாவடித்தனமாகும். மத்திய அரசு உடனடியாக மாநிலங்களுக்குரிய கல்வி நிதியை திருப்பி தர வேண்டும். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதை உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துவிட்டது என கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே கர்நாடக அரசு அனுமதியில்லாமல் ஹேமாவதி, ஹேரங்கி, கபிணி போன்ற அணைகளை கட்டியுள்ளனர். அதே போன்று மேகேதாட்டு அணையையும் கட்டுவார்கள், இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தமிழக முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சரும் உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதையும் படிங்க: ‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
இதுதொடர்பாக தமிழகத்தில் தமிழர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். முல்லைப்பெரியாறு அணையை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்த உரிய பாதுகாப்பை கேரள அரசு வழங்கிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக கேரள முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கோயில்களில் தமிழ் மொழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது. திருச்செந்தூர், மருதமலை முருகன் கோயில்களில் குடமுழுக்கு விழாவில், பிரதானமாக தமிழில் குடமுழுக்கு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, பழ.ராசேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.