தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், எம்.பி., முரசொலி, தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில்  கோட்டாட்சியர் இலக்கியா வரவேற்புரை ஆற்றினார்.   தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்,  மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மதியழகன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்க தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.




வரும் 29ம் தேதி வரை புத்தகத் திருவிழா


புத்தகத் திருவிழா இன்று முதல் வரும் 29ம் தேதி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.


தினமும் அறிவியல், இலக்கிய அரங்கம்


தினமும் காலை அறிவியல் அரங்கம், இலக்கிய அரங்கம் மாலையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிந்தனை நகைச்சுவை அரங்கம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்தாண்டு புத்தகத் திருவிழாவை சிறப்பு சேர்க்கும் வகையில்  30க்கும் மேற்பட்ட அறிவியல் அரங்குகள், கோலரங்கம், தொலைநோக்கி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. Book on Wheels, Science on Wheels, Space on Wheels, IAF Induction Publicity Exhibition Vehicle, Lab on Wheels, Skill on Wheels போன்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.


இத்துடன் உணவு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பையும் சேமிப்பையும் ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 1500க்கு மேல் புத்தகம் வாங்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது. 


தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த புத்தகப் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனியாக ஒரு அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தை சார்த்த படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம். 


புத்தகம் பரிசு அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள்


தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் ஒருங்கிணைக்கப்படும். அஞ்சல்துறை மூலம் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தகம் பரிசு அனுப்பிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவிற்கு என www.thanjavurbookfestival.org என்ற இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மேடைநிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


புத்தகங்கள் நன்கொடை வழங்க ஏற்பாடுகள்


அதே  இணையதளத்தின் மூலமாக உலகெங்கிலிருந்தும் நமது அரசு பள்ளி நூலகம் மற்றும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் புத்தகங்கள் நன்கொடை வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக நடைபெறவுள்ள தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.