மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஒப்பந்தப் பெண் பணியாளரே பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அமர்வில் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்குவங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361(2) கீழ் ஆளுநருக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, குடியரசு தலைவர் மீதோ, ஆளுநர் மீதோ அவரது பதவிக்காலத்தில் குற்ற வழக்குகள் தொடர முடியாது.
ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார வரம்பு தொடர்பாகவும் உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. "சட்டப்பிரிவு 361(2)இன் அர்த்தம் தொடர்பாக இந்த மனு புது கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் சட்டத்தின் நிர்வாக விதிகளின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும்போது, இந்த கேள்வி எழுகிறது" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் உதவியை நாடியுள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த ஏப்ரல் 24 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஆளுநர் ஆனந்த போஸ் தன்னை அழைத்து ராஜ்பவனில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் மே மாதம் போலீசில் புகார் அளித்தார்.
ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆளுநருக்கான சிறப்பு அதிகாரி நெருக்கடி தந்ததாகவும் அழுத்தம் தந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த அதிகாரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்றத்தை நாடினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "விசாரணை தொடர்ந்து நடக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361இன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையில்லா அதிகாரங்கள் காரணமாக தான் திக்கற்று இருப்பதாகவும் 361இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு என வழிகாட்டுதல்களை உருவாக்கி, எந்தளவுக்கு வரை அதிகாரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கு வரையறை வேண்டும் என மனுவில் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டிருந்தார்.