பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல்,இசை, உடற்கல்வி, கட்டிட கலை, தோட்டக்கலை, வாழ்வியல்திறன், ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஊதியம் இல்லாத மே மாதம்
கடந்த பதிமூன்று ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.
தொடர் கோரிக்கை
இந்நிலையில் திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக 2016, 2019, 2021 ஆகிய தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். மேலும் தற்போது நடந்து முடிந்த திமுக ஆட்சியில் கடைசி முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அதில் தங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், கல்வி மானிய கோரிக்கைலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினோ, கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தை கைவிட்டு, அரசு சலுகைகள் கிடைக்க காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய இன்னும் ஒரு 300 கோடி போதும். இதற்கு முதல்வர் அரசு கொள்கை முடிவு எடுத்தால் போதும். தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும், தங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரத்தை வலியுறுத்தி திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 181 நிறைவேற்ற வேண்டும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை இதுமட்டுதான், இதனை அறிவிக்கும் வரை தாங்கள் பல்வேறு கட்ட தொடர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்து கடந்த ஜுலை 8 -ம் தேதி முதல் சென்னை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை ஏதும் அரசு நடத்தாமல் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
முதல்வர் அளித்த வாக்குறுதி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கடந்த 2021 -ம் ஆண்டு நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியரான ஸ்டாலினின் பணிநிரந்த கோரிகையை கேட்டு, இந்த ஸ்டாலின் பதவி ஏற்ற 100 நாட்களில் அந்த ஆசிரியர் ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றபடும் என உறுதி தந்த நிலையில் 4 ஆண்டுகள் கடந்து பல நாட்கள் சென்ற நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்ற படவில்லை.
இந்த சூழலில் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்த ஆசிரியர் ஸ்டாலினை ஸ்டாலின் மீண்டும் அதனை நினைவுபடுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட ரோடு ஷோவின் அவரிடம் நினைவூட்டல் மனுவை அளித்துள்ளார்.
மேலும் அவர் அளித்த மனுவில் கூறியதாவது;
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம், மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில்" கலந்துக்கொண்ட நான் பகுதிநேர சிறப்பாசிரியர்களாகிய எங்களின் கோரிக்கையை உங்களிடத்தில் முன் வைத்தேன். அதற்கு நீங்கள் எனது கோரிக்கையை ஏற்று “இந்த ஸ்டாலின் முதல்வரானதும், அந்த ஸ்டாலின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்பதை வாக்குறுதியாக கூறினீர்கள்.
அதனடிப்படையில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் 2021ல் எண்:181வது கோரிக்கையை வைத்து எங்களை பணி நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை அளித்த முதல்வர் அய்யா அவர்களுக்கு, 12,917 பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் அனைவரும் தி.மு.கவிற்கு வாக்கு கேட்டு தங்களை முதல்வராக அமர்த்துவதற்கு தேர்தல் பிரச்சாரம் அனைத்து தொகுதிகளிலும் செய்து வந்தோம் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனடிப்படையில் 4 ஆண்டுகளாகியும் எங்களின் வாழ்வாதார கோரிக்கையான பணிநிரந்தரம் செய்துதர கேட்டுக்கொள்கிறேன். வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.