மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தெற்கு விநாயகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான சுரேஷ். இவருக்கு திருமணம் ஆகி 36 வயதான விஜி, என்ற மனைவியும், மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர் புத்தூர், காத்திருப்பு பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடையில் கடந்த 19 ஆண்டுகளாக விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் பணியாற்றி வந்த புத்தூர் டாஸ்மாக் கடையில் அவருக்கும் சூப்பர்வைசருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுரேஷ் திருநின்றியூர் டாஸ்மாக் கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கும் சுரேஷுக்கும் சூப்பர்வைசருக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் மீண்டும் அவர் காத்திருப்பு டாஸ்மாக் கடைக்கும் பின்னர் புதுப்பட்டினம் டாஸ்மாக் கடைக்கும் பணியிட மாறுதல் செய்து அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனால் சுரேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து மணமடைந்த சுரேஷ் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு சீர்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி தனக்கு நிரந்தர பணியிடம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த சீர்காழி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவரது கோரிக்கையை கேட்ட சீர்காழி காவல்துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். தொடர்ந்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் செல்போன் டவரில் ஏறிய சுரேஷ் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார். அரசு மதுபான கடை விற்பனையாளர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழி அருகே வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் மின் கம்பியில் உரசி தீபற்றி எரிந்து நாசம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இனாம் குணத்தலப்பாடி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான அறுவடை செய்த வைக்கோல்களை டிராக்டரில் ஏற்றி கொண்டு இனாம் குணத்தபாடி இருந்து ஆச்சாள்புரத்திற்கு சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பியில் உரசி தீ பற்றி வைக்கோல் எறிய தொடங்கியுள்ளது.
இதனைக் கண்ட டிராக்டரில் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென்று அதிகரித்ததால், இது குறித்து சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டு படுத்தினர். ஆனால் தீ அரைப்பதற்குள் வைக்கோல் மற்றும் டிராக்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.