ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது நல்லதல்ல. நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்று தஞ்சையில் சசிகலா நிருபர்களிடம் தெரிவித்தார்.
புரட்சிப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றார். அப்போது ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்ற நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று சட்டென்று சசிகலா பதில் அளித்தார்.
பின்னர் அவர் மேலும் கூறுகையில், அண்ணா ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டவர். அவர் வழியில் புரட்சி தலைவரும், புரட்சித்தலைவியும் தொடர்ந்து கழகத்தை செயல்படுத்தினர். அண்ணாவின் கொள்கைகளை வாய் அளவில் பேசாமல் செய்து காட்டிக் கொண்டு இருக்கும் அரசாங்கத்தை நடத்தி காட்டினர். திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை. நான் செல்லும் அனைத்து இடங்களிலும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல. தற்போதைய அரசில் நிறைய தவறுகள் நடக்கிறது. அதை அவர்கள் சரி செய்ய வேண்டும் என்றார்.
அப்போது நிருபர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள் தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் சசிகலா தெரிவித்தார்.