அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. புதிய பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 




அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களிலேயே பன்னீர்செல்வம் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.


இதையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 






இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர்ந்து செயல்படலாம் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றே தமிழ்நாடு அரசு செயல்பட்டது. எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 




அதேபோல், எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை முடக்கினால் எப்படி அந்த அரசியல் கட்சி இயங்கும். ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர். 


இதன் காரணமாக, தற்போது அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் நீக்கப்பட்டு, மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் அடங்கிய பேனர்களுடன் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இதனால், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் முழுவதுமாக ஓரங்கட்டுப்பட்டு வருகிரார்.