மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான வீரவேல். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி காரைக்காலைச் சேர்ந்த செல்வம் என்பவரது விசைப்படகில் 10 பேருடன், கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளார். இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 21 -ஆம் தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரவேல் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். இவரின் சிகிச்சைக்காக அரசு கொடுத்த 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி இருந்தது. அதனை பெற்று முழுமையாக செலவு செய்துள்ளார். தற்போது வீடு திரும்பி உள்ள வீரவேல் படுகாயம் காரணமாக திரவ ஆகாரங்களை மட்டுமே உட்கொண்டு வருகிறார். மேலும் இவர் உடல்நிலை மிகவும் பலவீனப்பட்டு உள்ள நிலையில், இவர் எந்த வேலைக்கும் செல்ல கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதுடன், தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழலில் தற்போது குடும்பத்துடன் தவித்து வருகின்றார். மேலும் அரசு அறிவித்த எந்த உதவிகளும் இதுவரையில் கிடைக்கப் பெறாத நிலையில் நேற்று வீரவேல் தனது மனைவி மதுமதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவி கூற வந்திருந்தார். ஆனால், கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வராததால் கூட்டம் அவசர கதியில் நடந்து முடிந்தது.
Actress Samantha: நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை; சிகிச்சைக்கு தென்கொரியாவிற்கு பறக்கும் சமந்தா?
இதனால் வீரவேல் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஏமாற்றத்துடன் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது அங்கு வந்த சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமல ஜோதி தேவேந்திரனை சந்தித்த வீரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும். வீரவேலால் இனி வேலைக்குச் செல்ல முடியாது, அவரது மனைவி மதுமதிக்கு அரசு வேலை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து தற்காலிக உதவிகளை தாம் செய்வதாக உறுதியளித்த கமல ஜோதி தேவேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் வாயிலாக முதல்வருக்கு அவர்களது நிலையை தெரிவித்து உரிய உதவிகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.