INDvsNZ 3RD ODI: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. 


இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. பயணத்தின் இறுதிப் போட்டி இன்று ஹாக்லி ஓவலில் உள்ள கிரிஸ்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால்  1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்து வருகிறது.


இந்தியா திணறல்:


டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே திணறி வந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் தனது முதல் ரன்னை அடிக்கவே 10 பந்துகளுக்கு மேல் வீணடித்துவிட்டார். முதல் விக்கெட் அணியின் ஸ்கோர் 39 ரன்களாக இருந்தபோது வீழ்ந்தது. அதன் பின்னர், 55 ரன்கள் இருக்கும் போது 2வது விக்கெட் வீழ்ந்தது. இந்திய அணி சார்பில் யாராவது நிலைத்து நின்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தரைத் தவிர யாரும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. 






ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்தில் 8 ஃபோர் உட்பட 49 ரன்னில் தனது அரைசதத்தினை நழுவவிட்டு ஆட்டமிழந்தார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.  இதில் அவர் 5ஃபோர், ஒரு சிக்ஸர் விளாசியிருந்தார். 47.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் கட்டுக்கோப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் சார்பில், ஆடம் மிலைன், மிட்ஷெல் தலா 3 விக்கெட்டுகளும்,  டிம் சவுதி 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். 


குறுக்கிட்ட மழை:


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்குன் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இலக்கை நோக்கி மிகவும் நிதானமாக ஆடி வந்த நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டம் தடைபட்டுள்ளது. 


இந்த போட்டி ஒருவேளை தொடரமால் பாதியிலே கைவிடப்பட்டால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றும். போட்டி தொடங்கி இந்திய அணி எஞ்சிய 9 விக்கெட்டுகளையும் விரைவாக கைப்பற்றினால் மட்டுமே இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும்.