அரிய வகை தசை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா மீண்டும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து  சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில்  ‘யசோதா’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஹரிஹரிஷ் இயக்கிய இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 


இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் சமந்தா நடித்து வரும் நிலையில் சமந்தாவின் உடல்நிலை குறித்து சில மாதங்களாகவே வதந்தி பரவி வந்தது. கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இதுகுறித்து அவர் விளக்கமளித்திருந்தார். அதில் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் நிலை இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பெற்று சரியான பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிறிது நீண்ட காலம் எடுக்கும். நாம் எப்பொழுதும் நம்முடைய பலத்தை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் மெதுவாக உணர்கிறேன். 






நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தது. என்னால் இன்னும் ஒரு நாளைக் கடக்க முடியாது என்று உணரும் நேரத்தில் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. இதுவும் கடந்து போகும் என தெரிவித்திருந்தார். தன் பிரச்சனையை வெளிப்படையாக சொன்ன சமந்தாவை பலரும் பாராட்டியதோடு, பூரண குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தனர். 


இந்நிலையில் சமந்தா மீண்டும் Myositis பாதிப்புக்கு சிகிச்சைப் பெற தென் கொரியாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்நாட்டில் சில மாதங்கள் தங்கியிருப்பார் என்றும், அதன்பிறகு குஷி படத்தின் படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்பார் எனவும் அதில் சொல்லப்பட்டுள்ளதால் சமந்தா ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.