திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா பெரும்பண்ணையூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கடந்த பல வருடங்களாக ஆற்றங்கரை ஓரத்தில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆற்றங்கரை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் தங்களுக்கு இடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2007ல் வட்டாட்சியர் ஏற்பாட்டின் பேரில் இடுகாட்டிற்காக அரசு புறம்போக்கு நிலம் ஒன்று சமன் செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் தனிநபர் ஒருவர் தலையீட்டால் இடுகாடாக மாற்றப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து இந்த ஊர் மக்கள் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு கொடுத்துள்ள மனுவில் எங்கள் ஊரில் எவரேனும் இறந்தால் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து விடுகிறோம். அரசே அந்த உடலை அடக்கமோ அல்லது தகனமோ செய்து கொள்ளட்டும். இது சம்பந்தமாக ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு நாங்கள் காரணமாக மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த சித்ரா வயது 50 என்கிற பெண் உடல்நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் இடுகாடு இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உடலை வைக்கப் போவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். பின்னர் அதே ஊராட்சியில் உள்ள பெரும்பண்ணையூர் பகுதியில் இறந்த சித்ராவின் உடலை அடக்கம் செய்ய செய்ய முடிவெடுத்து உடலை எடுத்து சென்றனர். அங்கு உடலை இறக்கி வைத்து தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு சொந்தமான இடத்தில் உடலை தகனம் செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனையால் அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சுமார் நான்கு மணிநேரத்திற்கு மேலாக இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் இடுகாடு இல்லாத கிராமத்திற்கு விரைவில் இடுகாடு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் இந்த ஒரு முறை மட்டும் இந்த கிராமத்தில் இந்த உடலை மட்டும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கிராம மக்களிடம் வேண்டுகோள் வைத்ததுடன் இனிமேல் அந்த கிராமத்தைச் சேர்ந்த எந்த உடலும் இங்கு தகனம் செய்யப்படாது என்று உறுதி அளித்ததையடுத்து அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இதேபோன்று பல்வேறு கிராமங்களில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இடமில்லாமலும் மேலும் இடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாமலும் பல கிராமங்களில் மக்கள் புகார் தெரிவித்த வருகின்றனர் உதாரணத்திற்கு திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக இடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாமல் விவசாய நிலத்தில் இறங்கி செல்லக்கூடிய நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது இதேபோன்று பல கிராமங்களில் இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கும் எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் தமிழக அரசு கிராமப்புற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்