கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளாக வரைமுறை செய்ய லலிதா ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு அரசு நியமித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அவரே செயல்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு பணிமாறுதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த லலிதா ஐஏஎஸ் மாற்றப்பட்டு, மாவட்டத்தின் 2 -வது மாவட்ட ஆட்சியராக திருவள்ளூரில் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த மகாபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்று பொறுப்பேற்கும் முன்பு மாயூரநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு பின் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டு பணியை துவக்கினார். பொறுப்பேற்ற முதல் நாள் அன்று மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் ஆய்வு செய்தார். அடுத்த நாளே மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடாக காணப்பட்டதை உடனடியாக சரி செய்யவும், நகராட்சி இலவச கழிப்பிடத்தை தூய்மையாக பராமரிக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், உத்தரவு பிறப்பித்ததுடன் அதனை மறந்து விடாமல், மறுநாள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்த அதே இடத்தில் நகராட்சி துறையினர் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனரா என்று நேரில் சென்று மீண்டும் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு நகராட்சி அதிகாரிகள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டிருந்ததும், நகராட்சி கழிப்பறை தூய்மை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்ததை அடுத்து இதுபோல் திறம்பட பணிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தான் சொன்ன பணிகளை செய்து முடித்துள்ளனரா என்று மீண்டும் அதே பகுதிக்கு வந்து ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியர் மீண்டும் மறு ஆய்வு செய்வார் என தெரியாத நிலையிலும், அப்பணிகளை உடனடியாக சரிவர நிறைவேற்றி இருந்ததால் நகராட்சி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் மாவட்ட மக்களிடம் ஆட்சியர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Practical Exam Guidelines: 11, 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு: முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு