தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருந்து தருமபுரி, திருவண்ணாமலைக்கு தலா 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத் திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்த நிலையில் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் லாரிகளில் ஏற்றி தஞ்சாவூர் ரயில் மற்றும் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டது. இதில் தஞ்சாவூரில் இருந்து தருமபுரி, கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சாலைமறியல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி. திருவோணம் பகுதிகளில் மழையால் 50 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த நெல் பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்யவில்லை என கூறி விவசாயிகள் அழுகிய நெல் பயிரகளுடன் ஊரணிபுரத்தில் சாலைமறியல் நடத்தி நடத்தினர்.
தஞ்சை மாவட்டத்தில் நான்கு நாட்களாக பெய்த மழையில் திருவோணம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைத்து உள்ளன. மேலும் 3500 ஏக்கர் கடலை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்யவில்லை என கூறி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் ஊரணிபுரம் கடைவீதியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். டெல்டா மாவட்டத்தை மீண்டும் பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறி போராட்டம் நடத்திய விவசாயிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து தாசில்தான் அப்பகுதிக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.