மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும் குடமுழுக்கு திருப்பணியின் போது கிடைக்கப்பட்ட தேவார செப்பேடுகள் ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பார்வையிட்டு அவற்றின் தன்மை குறித்து கேட்டறிந்தார். அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு தான் தமிழகத்தில் 918 திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்டுள்ளது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் 400 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தீதாஞ்சேரி திருக்கோயில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு கண்டுள்ளது. இதுபோன்று 918 கோயில்களில் நூறு ஆண்டுகள் கடந்த 30-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்கு கண்ட வரலாறு மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆன்மீக ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 27 திருக்கோயில்களில் 23 கோயில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. சட்டநாதர் திருக்கோயில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் தான் குடமுழுக்கு நடைபெற்றது. ஆகவே ஆண்டாண்டு காலமாக குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் எல்லாம் குடமுழுக்கு விரைவு படுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக தளபதி அவர்களின் ஆட்சி நடந்து வருகிறது. சட்டநாதர் கோயிலை பொறுத்த வரைக்கும் திருக்கோயில் குடமுழுக்கு பணிக்காக கடந்த ஏப்ரல் 16 - ம் தேதி அன்று பள்ளம் தோன்றியபோது பல அறிய செப்பேடுகளும், உலோக திருமணிகளும், பூஜை பொருட்களும் கிடைத்துள்ளன.
இதுவரை தேவாரம் ஓலைச்சுவடி மற்றும் நூல்களில் தான் கிடைத்துள்ளது. முதன் முதலில் செப்பேடுகளில் இந்த தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ள வரலாறு முதல் முறை தமிழகத்தில் கிடைத்துள்ளது. இதில் 110 செப்பேடுகள் முழுமையாகவும், 83 செப்பேடுகள் சிதம்படைந்தும், 23 திருமணிகள் முழு அளவில், 13 பூஜை பொருட்களும் கிடைத்திருக்கின்றன. இவை பாதுகாப்பாக கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. செப்பேடுகளில் மொழிபெயர்க்க வேண்டிய அரிய வகை பாடல்கள் இருப்பதால் அதனை தொல்லியல் துணையுடன் கலந்து ஆலோசனை செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள்.
மேலும் செப்பேடுகள் இங்கு இருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறார்கள் அவைகளை எடுப்பதற்கான முயற்சிகளும் அரசின் கவனத்தில் கொண்டு சென்று, முதல்வரின் ஆலோசனை பெற்று செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி ஒரு ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சியாக உள்ளது. ஆன்மீகவாதிகள், இறையன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற மகிழ்ச்சி கலந்த ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.