நிலவின் தென் துருவத்தை உலக நாடுகளை சேர்ந்த அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களும் குறிவைப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


சாதித்த இந்தியா..!


நீண்டகால கடும் உழைப்புடன் 140 கோடி இந்தியர்களின் கனவை சுமந்து கொண்டு,  40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம். இதன் மூலம் நிலவின் மேற்பரபில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. அந்த தென்துருவம் என்பதுதான் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது. அது ஏன் என்பது தான் இங்கு விரிவாக விளக்கப்பட உள்ளது. 


தண்ணீர்.. தண்ணீர்..!


நிலவு தொடர்பாக இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை சந்திரயான் 3 வழங்கும் என்பதோடு, சந்திரனின் மிகவும் மதிப்புமிக்க வளங்களில் ஒன்றான நீர் பனி பற்றிய ஏராளமான தகவல்கள் தென் துருவத்தில் இருந்து கிடைக்கப்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். இதன் காரணமாகவே விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும்,  தனியார் நிறுவனங்களும், நிலவின் வளங்கள் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான சாத்தியமான பயணங்களுக்கான திறவுகோலாக சந்திரயான் 3 வெற்றியை பார்க்கின்றன.


நிலவில் தண்ணீர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?


1960களின் முற்பகுதியில் அதாவது அமெரிக்காவின் முதல் அப்பல்லோ தரையிறங்குவதற்கு முன்பு,  நிலவில் தண்ணீர் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். ஆனால், 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் தொடக்கத்திலும்,  அப்பல்லோ குழுவினர் பகுப்பாய்வுக்காக கொண்டு வந்த மாதிரிகளை பரிசோதித்தபோது அது உலர்ந்ததாகவே தோன்றியது. 2008 ஆம் ஆண்டில் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன், அந்த நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகளை மறுபரிசீலனை செய்தனர். அப்போது, எரிமலை துண்டுகளில் ஹைட்ரஜன் இருப்பதை கண்டறிந்தனர். 2009 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான்-1 தொடர்பான ஆய்வில் இருந்த நாசா சந்திரனின் மேற்பரப்பில் நீர் இருந்தை கண்டறிந்தது. அதே ஆண்டு நாசா மேற்கொண்ட மற்றொரு ஆய்விலும் நிலவின் தரைப்பகுதிக்கு அடியில் நீர் இருப்பதை உறுதி செய்தது. முன்னதாக, நிலவு தொடர்பாக ஆராய 1998ம் ஆண்டு அமெரிக்கா தனது மூன்றாவது திட்டத்தை செயல்படுத்தியது. அதன் மூலம்,  நிலவின் தென்ருதுவத்தில் நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்த பனி வடிவில் அதிகப்படியான தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தது.


சந்திரனில் உள்ள நீர் ஏன் முக்கியமானது?


நிலவில் உள்ள நீராதாரங்களை ஆராய ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  அவை நிலவில் உள்ள எரிமலைகள், வால்மீன்கள், நிலவில் இருந்து பூமிக்கு வந்த எரிகற்கள் மற்றும் கடல்களின் தோற்றம் ஆகியவை தொடர்பான பல்வேறு தரவுகள் கிடைக்கபெறும் என்பதே இதற்கு காரணமாகும்.


நீர் பனி போதுமான அளவில் இருந்தால் அது நிலவை ஆராய்ச்சி செய்ய செல்வோருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கலாம் மற்றும் ஆராய்ச்சிக்கான சாதனங்களை குளிரூட்டவும் உதவும். அதோடு நிலவில் சுரங்கம் அமைக்கவும், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் செய்யும்போதும் தேவைப்படும் எரிபொருட்களுக்கான ஹைட்ரஜனை உருவாக்கவும், சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உருவாக்கவதற்காகவும் இந்த பனிப்பாறைகள் உடைக்கப்படலாம்.   1967ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தத்தின்படி,  எந்தவொரு தனிநாடும் நிலவின் உரிமையை கோரமுடியாது. அங்கு வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த சூழலில் சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக செய்து முடித்து இருப்பதன் மூலம், விண்வெளி சார்ந்த வணிகத்தில் இந்தியா எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். 


தென் துருவத்தை ஆராய்வதில் உள்ள சிரமம் என்ன?


நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முந்தைய முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. அதில் இந்தியாவின் சந்திரயான் 2 மற்றும் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் ஆகியவையும் அடங்கும். காரணம் இந்த தென் துருவமானது முந்தைய பயணங்களால் குறிவைக்கப்பட்ட பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதோடு, அங்கு பள்ளங்கள் மற்றும் ஆழமான அகழிகள் நிறைந்துள்ளன. நிலவின் மற்ற பகுதிகளில் உலக நாடுகள் லேண்டரை தரையிறக்கிய தரவுகள் உள்ளன. ஆனால், நிலவின் தென்துருவ பயணத்திற்கு திட்டமிட எந்தவித தரவுகளும் இல்லை. எப்போதும் நிழல் சூந்த பகுதியாக இருப்பதால், இது நிலவின் கருப்பு பகுதியாக என அழைக்கப்படுகிறது. இதனால்,  தரையிறக்கத்தின் போது அங்குள்ள பாறைகள் மீது லேண்டர் மோதி பள்ளங்களில் கவிழலாம். இப்படிப்பட்ட பல்வேறு ஆபத்துகளையும் தாண்டித்தான் இந்திய தனது விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவும் சீனாவும் நிலவின் தென் துருவத்திற்கு பயணங்களைத் திட்டமிட்டுள்ளன.