மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது, தமிழில், ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில், விருது வழங்கப்பட உள்ளது. 


ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி உள்ளார். நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். 


மானுட உணர்வின் பேராழத்தை விளக்குபவை


’கடந்த நாற்பதாண்டுகளாக எழுதிவரும் தேவிபாரதியின் ஒவ்வொரு படைப்பும் மானுட உணர்வின் பேராழத்தை விளக்க முயல்பவை. இவருடைய மூன்றாம் நாவலான நீர்வழிப் படூஉம், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வுப்புலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைச் சித்தரிக்கிறது. எளிய மனிதர்களுக்கு நேரும் பிழைப்புத் துயரின் வேர்ப்புழுக்கத்தை கதைகளாகவும் நாவல்களாகவும் சித்தரித்த சமகாலத்தின் முதன்மைப் படைப்பாளிக்கு சாகித்ய விருது கிடைத்திருக்கிறது’ என்று வாசகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


இலங்கைத் தமிழரும் வாசகருமான லட்சுமணசாமி கூறும்போது, ’’பள்ளம் கண்ட இடமெல்லாம் பாய்ந்தோடும் இயல்பு நீருக்குண்டு. நீர்வழிப்படூஉம் என்பது, நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பதுமாகும். மனிதர்கள் நீர்வழிப் படுகிறவர்களாய் இருக்கிறார்கள். மனித இயல்பு அதுதான். இந் நாவலில் வரும் மனிதர்களும் தத்தம் பூர்வீக ஊர்களிலிருந்து வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.


மனித சமுதாயம் விரிவுகொள்ளக் கொள்ள வாழ்வின் இறுகிவரும் சூழ்நிலைமையிலிருந்து தப்புவதற்காக அது இயல்பாக நடக்கவே செய்யும். அதுபோல் தினசரிகளின் நெருக்குதல்களால் வாழ்வு கடினமாவதும், பின் தெளிந்து இளகுவதுமாய் தண்ணென்ற நீரின் தன்மையை மனிதர் அடைந்துகொள்கிறார்கள்.



தன் முந்திய நாவல்கள் இரண்டையும்விட தேவிபாரதி இதில் காட்டும் வறுமையின் வெளிச்சம் மிகக் கூர்மையானது. பகட்டில்லாதது. இவற்றையெல்லாம் பார்க்கிறபோது படைப்பாளிக்கு அவர் கையாண்ட மொழியானது வெகுவாகக் கைகொடுத்திருக்கிறதென்பதை புரிந்துகொள்ள முடிகிறது. வெகுஜன நூல் வாசிப்பின் வேகத்தில் பக்கங்களைக் கடந்துவிடவே முடிவதில்லை. மொழி தன்னை ரசிக்காமல் செல்ல அனுமதி மறுக்கிறது. தாண்டிச் செல்வதையும் தடுக்கிறது. 

 



மொழி ஊடகமானது மிக்க வலுவுடன் இந்த நாவலில் பிரயோகமாகியிருப்பதாய் நான் காண்கிறேன். மொழியென்று நான் சொல்வது கதைப் பிரசன்னத்தின் மொழியல்ல ; நிலமொழி’’ என்று எழுத்தாளர் தேவி பாரதிக்குப் புகழாரம் சூட்டி உள்ளார். 

 


எழுத்தாளர்கள் வாழ்த்து


இந்த நிலையில், ’நீர் வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர் வண்ணதாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.