Mahakavi Bharathiyar Birthday: இன்று மறைந்த கவிஞர் பாரதியாரின் 142ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் வரும் நிலையில் பாரதியாரின் தீவிர பற்றாளரான நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) அவருக்கு வாழ்த்துக் குறிப்பு பகிர்ந்துள்ளார்.
பாரதியார் பிறந்தநாள்
தன் வீரியம் மிக்க கவிதைகள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர் மகாகவி பாரதியார். பத்திரிகையாளர், கவிஞர், மொழி ஆர்வலர், உணர்ச்சிமிகு காதலன் என தமிழர்களின் பெருமையாக விளங்கும் பாரதி, நவீன கவிதைகளின் முன்னோடியாக தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றென்றும் கொண்டாடபட்டு வருகிறார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தன் சிறு வயது முதலே பாரதியாரின் பற்றாளராகவும், ரசிகராகவும் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். தன் டிவிட்டர் பக்கத்தில் முண்டாசு அணிந்த பாரதி போல் தன்னை பொருத்தி புகைப்படம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு பாரதியாரின் தீவிர பற்றாளராக வலம் வரும் நடிகர் கமல், அவரது பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் பதிவு
“சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.