உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் பெற்று சொத்தை தனது பெயருக்கு மாற்றிய சகோதரி. பாதுகாப்பு கேட்டு தனது இறப்புச் சான்றிதழ் நகலுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட செருமங்கலம் கக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த வீராசாமி சிந்தாமணியம்மாள் தம்பதியினருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் சஞ்சீவி என்கிற தவசுமணி(48)உதவி இயக்குனராக இருந்து வருகிறார். இவர் தனது 28 வது வயதில் சென்னை சென்று அங்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில் தற்போது மனசுக்குள்ள மகராசா என்கிற படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அக்கா செய்த மோசடி:


இந்த நிலையில் இவர் தன் நான்காவது அக்காவான மல்லி என்பவர் தனது தந்தைக்கு சொந்தமான 33 குழி(4608)சதுர அடி இடத்தை, தனது இறப்பு சான்றிதழை வைத்து அவரது பெயருக்கு கடந்த 2019ல் மாற்றிக் கொண்டதாக கூறி தனது இறப்பு சான்றிதழ் நகல் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரத்தின் நகல் ஆகியவற்றுடன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்.



 

போலி இறப்புச் சான்றிதழ்:


 

அந்த புகார் மனுவில் தனது நான்காவது அக்கா போதுமல்லி என்பவரை ஒரத்தநாடு வட்டம் குளமங்கலத்தில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் தனது மூன்று மகன்களுடன் செருமங்கலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியதாகவும் தொழில் சார்ந்து நான் அடிக்கடி வெளியூர் செல்வதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் 11.06.1998 அன்று தான் இறந்து விட்டதாக மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

 

அந்த இறப்பு சான்றிதழில் அதனை பதிவு செய்த செய்தி தேதி 16.03.1998 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போலியானதும் மோசடியாகவும் பெறப்பட்ட இறப்புச் சான்றிதழை பயன்படுத்திக்கொண்டு நான் உயிரோடு இருக்கும்போதே எனக்கே தெரியாமல் கடந்த 15.11.2019 அன்று செருமங்கலத்தைச் சேர்ந்த எம்.கே சந்திரசேகரன் என்பவர் பெயரால் வாங்கப்பட்ட பத்து ரூபாய்க்கான முத்திரைத்தாளில் எங்கள் சொத்தை மற்ற மூன்று சகோதரிகளும் சேர்ந்து எழுதிக் கொடுத்ததாக பத்திரமும் தயார் செய்து வைத்துள்ளார்.



 

அந்த மோசடியான பத்திரத்தில் நான் உயிரோடு இருக்கும்போது அதனை மறைத்து பிழைப்புக்காக சென்னை சென்று இருந்த போது லாரியில் அடிபட்டு இறந்து விட்டதாகவும், பிணம் அழகிய நிலையில் என்னை அங்கேயே அடக்கம் செய்துவிட்டதாகவும் அதனால் மற்ற மூன்று சகோதரிகளும் சேர்ந்து எழுதி கொடுத்ததாகவும் உள்ளது. அதன் பின் கடந்த 2004 ஆம் ஆண்டு எனது தாயார் சிந்தாமணி அம்மாள் தனது மகள் போதுமல்லிக்கு எழுதி கொடுத்ததை போன்று மோசடியான எண்ணத்துடன் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

எனது தாயார் கடந்த 16.05.2022 அன்று உடல்நலம் கொண்டு இறந்து விட்டார். அதற்கு நான் உடனிருந்து ஈம கிரியைகள் செய்து முடித்தேன்.இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு இறந்தவர் 2004 ஆம் ஆண்டில் பத்திரம் எழுதி கைரேகை வைத்து கொடுத்துள்ளதாக உள்ளது. மேலும் பூர்வீக இடத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள பொருட்களை போதுமல்லியின் மகன்கள் திருடி சென்றதாகவும் அவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்,

பாதுகாப்பு வேண்டும்:


கடந்த 23.11.2023 அன்று வடுவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை எடுத்து இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் எனக்கு தொல்லை கொடுக்க மாட்டேன் என்று அவர்கள் எழுதிக் கொடுத்துச் சென்ற நிலையில் அடுத்த நாளே போதுமல்லியின் மகன் இளையராஜா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இது குறித்தும் கடந்த 25.11.2023 அன்று மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் எனவே போதுமல்லி மற்றும் அவரது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் மனு கொடுத்துள்ளார்.