மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிவந்த நபரை காவல்துறையினர் கைது செய்து, 20 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் இரு சக்கரம் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது. மேலும் தங்களின் இருசக்கர வாகனம் எப்போது காணாமல் போகும் என்ற மனநிலையில் இருந்து வருவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகின.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளியை அடையாளம் கண்டறிந்தனர்.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடமுயன்ற போது அந்த நபரை தனிப்பட்ட காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில், அவர் பூம்புகார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் 28 வயதான மகன் சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர் திருடிய இருசக்கர வாகனங்களை பல்வேறு இடங்களில் அடமானம் வைத்திருந்த 20 இருசக்கர வாகனத்தை மீட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஓரிரு நாளில் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்