இந்திய நடிகர்களின் திரைப்படங்களை விமர்சிக்கும் விதமாக மோசமான திரைப்படங்கள் (Worstfilm) எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதில் பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத படங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளம்:
சமூக வலைதளங்களில் எப்போதும் ஏதாவது ஒரு விவகாரம் குறித்து விவாதங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும். அதுதொடர்பாக ஏதேனும் ஒரு ஹேஷ்டேக் டிரெண்டாவதும் வாடிக்கை தான். இதில் சில விவகாரங்கள் மட்டும் தான் வடமாநிலங்கள் தொடங்கி, தெற்கே தமிழ்நாடு வரையில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் விவாதிக்கப்படும். அதில் குறிப்பாக சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் தான் தற்போது டிவிட்டரில் Worstfilm எனும் ஹேஷ்டேக் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களாலும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
#Worstfilm
இந்த ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வதுடன் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் சிறந்த, மோசமான, அநாவசியமாக அதிகம் பாராட்டப்படும் திரைப்படங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு வருகின்றனர். அதோடு, ஒவ்வொரு நடிகருக்குமான சிறந்த இயக்குனர் மற்றும் ஜோடி ஆகியவை குறித்தும் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து களமாடி வருகின்றனர். இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் தொடங்கி, தமிழ் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் என பலதரப்பட்ட ரசிகர்களும் தங்களது கேள்விகளையும், பதில்களையும் #Worstfilm எனும் ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர்களை கடந்து தேசிய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களான ஷங்கர் மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் சிறந்த மற்றும் மோசமான படங்களையும் ரசிகர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.
களமாடும் ரசிகர்கள்:
வழக்கம்போல் இந்த டிவிட்டர் டிரெண்டிங்கிலும் விஜய் vs அஜித் மற்றும் ஷாருக்கன் vs சல்மான் கான் என, ரசிகர்கள் பல்வேறு பிரிவுகளாக சமூக வலைதலங்களில் களமாடி வருகின்றனர். அவரவர் ஆதர்ஷன நாயகர்களின் சிறந்த படங்களை பட்டியலிடுவதோடு, எதிர்தரப்பினரின் மோசமான படங்களையும் பட்டியலிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, #Worstfilm எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.