தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான அணைக்குடி உட்பட பல பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மக்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உட்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த பல மாதங்களாக இந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் குரங்குகள் புகுந்து பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகிறது. வீடுகளுக்குள்ளும் புகுந்தும் பொருட்களை இழுத்து தள்ளி அட்டகாசம் செய்து வருகின்றன. சமையல் பொருட்களை வாரி இறைத்து குரங்குகள் துவம்சம் செய்கிறது. இதனால் மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் கேபிள் வயர்களில் ஊஞ்சல் போல் ஆடி அவற்றையும் சேதப்படுத்துகின்றனர். குழந்தைகள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு குரங்குகளால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: கொள்ளிடம் ஆற்றின் கரயோர கிராமங்களில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதி படுகை நிலங்களில் தென்னை, வாழை கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக இப்பகுதி வயல்களில் கூட்டம், கூட்டமாக குரங்குகள் புகுந்து பயிர்களை அழித்து அட்டகாசம் செய்து வருகிறது.






குறிப்பாக கரும்பு, வாழை பயிர்களை அதிக அளவு சேதப்படுத்துகிறது. தென்னை மரங்களில் தனது குட்டிகளோடு தாவி குதிக்கும் குரங்குகள் முற்றாத தேங்காய்களை பறித்து தண்ணீரை குடித்து விட்டு அவற்றை வீசி செல்கிறது. மதிய நேரங்களில் வீட்டின் வெளியே இருக்கும் குடிநீர் குழாய்களை திறந்துவிட்டு அதில் குரங்குகள் குளித்து கும்மாளமிடுகிறது. மேலும் கிராமத்து வீடுகளில் புகுந்துவிடும் குரங்குகள் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை வாரி இறைத்து அட்டகாசம் செய்கிறது. கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை போட்டு உடைத்து செல்கின்றன.

பள்ளி சென்று விட்டு வரும் குழந்தைகளின் பைகளை பிடித்து இழுக்கின்றன. இதனால் குழந்தைகள் அலறி அடித்து கொண்டு ஓடி கீழே விழுந்து அடிபடும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.