தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக  தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர்.

குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டு ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72 ஆயிரத்து 816 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. குறுவை பருவத்தில் சராசரியாக எக்டேருக்கு 6 ஆயிரத்து 51 கிலோ மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.





சம்பா மற்றும் தாளடி பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 38ஆயிரத்து 905 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 71 ஆயிரத்து 325 எக்டேரில் அறு வடை பணி முடிந்துள்ளது. இனிவரும் கோடை பருவத்திற்கான குறுகிய கால நெல் விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு உள்ளது. உளுந்து விதைகள் 367 டன் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான யூரியா 5,469 டன்னும், டி.ஏ.பி. 1,387 டன்னும், பொட்டாஷ் 1,350 டன் னும் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 3,832 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறுவை பருவத்தில் 391 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 21ம் தேதி வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை 98 ஆயிரத்து 194 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை ரூ.977 கோடி மின்னணு வங்கிப் பணபரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.