மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்துநிலையம், பிடாரி வடக்கு வீதி, கடைவீதி, கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நினைத்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், அவ்வபோது விபத்துகளும், அவசரத்துக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட தடைப்பட்டு செல்லும் நிலை இருந்து வருகிறது.
வாகன ஓட்டிகள் பலர் சிறிது தயக்கம் இன்றி இடையூறு ஏற்படும் வண்ணம் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் பள்ளி செல்லும் நேரங்களில் சாலைகளில் நிறுத்தப்படுவதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் தங்கள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு, சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். அதுமட்டுமின்றி பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரா வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாய தலைகவசம் அணியவும் போக்குவரத்து காவல் துறை காவலர்கள் அறிவுறை வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டால் இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.